கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில், வட தமிழகம் உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் நீலகிரி உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது. இதனிடையே தமிழகத்தில் வரும் நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தற்போது இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற கூடும்
அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், புயலாக வலு பெறக்கூடும். இது குறித்து தொடர்ந்து கண்கானித்து தகவல்கள் தெரிவிக்கப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில், வட தமிழகம் உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ராமநாதபும் மாவட்டத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்து வரும் 5 தினங்களுக்கு, அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில், கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று அந்தமான் கடற்பகுதி மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகளில், மணிக்கு 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும். நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், 45 முதல் 55 கி.மீ.வேகத்திலும், 1-ந் தேதி 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், 2-ந் தேதி 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் சுறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீனவர்கள் இன்றுக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.