தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பு ஜனவரி 13ஆம் தேதி மதியம் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அப்போது சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளை பாதிப்புகள் குறித்தும், அதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்க கோரியும் நேரில் வலியுறுத்துகின்றனர்.2023 டிசம்பரில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை வெள்ளக்காடானது. இந்தப் புயல் மழை பாதிப்பில் இருந்து தமிழ்நாடு விடுபடாத நிலையில் அடுத்த மழைப்பொழிவு தென் மாவட்டங்களில் நிகழ்ந்தது.
காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 90 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. திருநெல்வேலி ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.கர்ப்பிணி பெண்கள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து பேச உள்ளனர்.முன்னதாக இந்தச் சந்திப்பு குறித்து மு.க ஸ்டாலின் தெரிவிக்கையில், " வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக்குள் எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்திக்கிறனர்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.