“சூரபத்மனை வடிவேல் வெற்றிவேல் முருகன் வென்றதுபோல் தமிழ்நாட்டின் தீயசக்தி திமுகவை எடப்பாடி பழனி சாமி வெல்வார்” என டி. ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் அறிக்கைக்கு அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அதில், “தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட துணிவு உள்ளதா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார். மேலும் அவர், “கடந்த காலங்களில் திமுக தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட வரலாறு உண்டா?அதிமுக மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மாபெரும் வெற்றிப் பெற்றது. கருணாநிதி இருக்கும்போதும் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது.அதிமுகவிடம் தோற்று திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து இருந்த நாள்களும் உண்டு. ஆனால் அதிமுக தனித்துப் போட்டியிட்டு மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வென்றுள்ளது.
இது குறித்து திமுக ஆலந்தூர் பாரதி போன்றவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி திமுகவின் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளார்.பொன்முடியை தொடர்ந்து பல்வேறு அமைச்சர்கள் தண்டனை பெற காத்திருக்கின்றனர். இந்த நிலையில், திமுகவின் தோல்விகளை உணராமல் எடப்பாடியாரை விமர்சித்துள்ளார். மு.க. ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்தவர். தேர்தலில் தனித்துப் போட்டியிட மு.க. ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ துணிவு உண்டா?சூரபத்மனை வடிவேல் வெற்றிவேல் முருகன் வென்றதுபோல் தமிழ்நாட்டின் தீயசக்தி திமுகவை எடப்பாடி பழனி சாமி வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.