டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (டிச.19) இரவு சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குமரிக் கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. திரும்பும் திசை எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரசு போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இந்திய அரசின் கடற்படை, விமான படை, ராணுவப் படை என முப்படைகளும் களத்தில் மக்களுக்கு உதவி வருகின்றனர். கடற்படையின் ஹெலிகாப்டர் மூலமும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் 5 அதிகாரிகள் கொண்ட குழு இன்று (டிச.20) தமிழகம் வர உள்ளனர். இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனையில் பங்கேற்ற பின் இரவு 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.அதோடு, ஏற்கெனவே தெரிவித்தபடி, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு பிரதமரின் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.