ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் டிசம்பர் 17ம் தேதி முதல் துவங்கும் காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்ட நிகழ்வு, கடந்த ஆண்டு துவங்கியது.
தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆன்மிகவாதிகள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் உட்பட, பல்வேறு தரப்புகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு சுற்றுப்பயணம் செய்தனர். இந்நிலையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ், காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு, வருகிற 17ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான எற்பாடுகளை சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இருந்து பிரத்யேகமாக 7 ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு டிசம்பர் 17-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்குச் செல்ல உள்ளார். அப்போது அவர் காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார் என்றும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வாரணாசிக்கு செல்கிறார். காசி-தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்வதைத் தவிர, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார்” என்று மூத்த மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் 7 குழுக்களாக வாரணாசிக்கு வருகிறார்கள். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் ஆன்மீகக் குழு, கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி மற்றும் காவேரி போன்ற நதிகளுக்கு பெயரிடப்பட்ட, வருகை தரும் பிரதிநிதிகள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் உள்ள வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் தனது தொகுதிக்கு செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி, நகர்ப்புற (அதாவது மாநகராட்சி) பகுதிக்கான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வார் என்றும், பின்னர் மாலையில் காசி-தமிழ் சங்கமத்தில் அவர் பங்கேற்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.