வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொன்முடி வழக்கில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’தமிழக அமைச்சராக இருந்த போது பொன்முடி மீது அதிமுக ஆட்சிக் காலத்தில் பழிவாங்கும் எண்ணத்தோடு சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை என்று நிரூபித்து அவருக்கு விடுதலை தரப்பட்டது.
இந்த விடுதலையை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் கீழமை நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை ரத்து செய்தார். பொன்முடியையும், அவரது மனைவியையும் நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி இருந்தார்.இத்தனை வருட பழைய வழக்கு என்பதாலும் 2011-இல் இருந்து இதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்ததாலும் அவருடைய வயதை கருத்தில் கொண்டும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து, அதை உயர் நீதிமன்றம் மாற்றி எழுதியிருக்கிறது போன்ற காரணங்களாலும் 3 வருட சாதரண சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தார்.
அந்த சிறை தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இந்த மேல்முறையீட்டு வழக்க்கில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்று நம்புகிறோம். ஏனென்றால் பொன்முடியை பொறுத்தவரை இந்த வழக்குத் தொடரும் போது வெறும் 4.80 லட்சம் தான் கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது.நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை Latent Bias என சட்ட முறையில் கூறுவார்கள்.
இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்.மேல்முறையீட்டின் விசாரணையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும், என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.