உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி அணி எது என்று இன்றைய பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இருப்பினும், ஏற்கனவே 4-வது இடத்தில் நீடித்து வரும் நியூசிலாந்து அணியே அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது.
எனவே, வருகிற நவம்பர் 15-ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், புள்ளிகள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நவம்பர் 16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோது உள்ளனர்.
அரையிறுதி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
இந்த இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் நாளிலும் குறைந்தபட்ச ஓவர்களை வீச மழை அனுமதிக்கமால் போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்கிற கேள்வி எழுகிறது.
அப்படி நடந்தால் லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த விதியின்படி, இந்தியா தனது அரையிறுதியில் மழை காரணமாக (வாஷ்-அவுட் செய்யப்பட்டால்) கைவிடப்பட்டால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இதேபோல், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி வாஷ்-அவுட் செய்யப்பட்டால், இரு அணிகளில் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்திருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.