மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும்
தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், 3 குழுக்களை உருவாக்கியுள்ளார். தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையிடும் குழுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க-வின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுக்கான தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடைபெற்றது.இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தீர்க்க முடியாத பிரச்னையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக - பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். அமைச்சர்களின் மாவட்டம் - பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும்” என்று என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.