வைப்ரண்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாடு அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் குஜராத் அரசு சென்னையில் ரோட்ஷோவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
குஜராத் மாநில நிதியமைச்சர் கனு தேசாய் நவம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் ரோட்ஷோவில் பங்கேற்று தலைமை தாங்குவார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 10-12, 2024-ம் ஆண்டு வைப்ரண்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டின் (வி.ஜி.ஜி.எஸ்) 10-வது பதிப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கில் குஜராத் அரசு பல்வேறு மாநிலங்களில் ரோட்ஷோவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் நவம்பர் 2-ம் தேதி பேரணி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் பேரணி நடைபெறும் மறு நாள் சென்னையில் நடைபெறுகிறது. குஜராத் மாநில நிதியமைச்சர் கனு தேசாய் பேரணியில் கலந்து கொண்டு வி.ஜி.ஜி.எஸ்-ன் 20 ஆண்டுகால வெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் ‘விக்சித் பாரத்@2047’ மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் அதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.
GIFT City, Dholera SIR மற்றும் மண்டல் பெச்ராஜி சிறப்பு முதலீட்டு மண்டலம் (MBSIR) போன்ற எதிர்காலத்தின் மெகா திட்டங்களில் முதலீடுகளை ஈர்ப்பதை சென்னை ரோட்ஷோ நோக்கமாகக் கொண்டுள்ளது. சி.ஐ.ஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவரும், ஏ.பி.டி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் செயல் இயக்குநருமான சங்கர் வாணவராயர் வரவேற்புரை ஆற்றுகிறார். குஜராத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து அம்மாநிலத்தின் நிலச் சீர்திருத்த ஆணையராக உள்ள ஸ்வரூப், ஐ.ஏ.எஸ் விளக்குகிறார். குஜராத் அரசு ஏற்கனவே டெல்லி, மும்பை மற்றும் சண்டிகரில் இதுபோன்ற ரோட்ஷோவை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.