கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியின் போது பாலஸ்தீன கொடி காட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
பாலஸ்தீன கொடி பறக்கவிட்ட ரசிகர்கள் கைது
இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஈடன் கார்டன் மைதானத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனக் கொடியை காட்டியதற்காக 4 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது கேட் 6 மற்றும் பிளாக் G1 பகுதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனை மைதானத்தில் இருந்த போலீசார் உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாலி, எக்பால்பூர் மற்றும் கராயா பகுதிகளில் வசிப்பவர்கள் என்று தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் எந்தவித கோஷமும் எழுப்பவில்லை என்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் நான்கு போரையும் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் நள்ளிரவில் விடுவித்தனர்.
“முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, நான்கு பேரும் மைதான காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஹவுராவில் உள்ள பாலி மற்றும் கொல்கத்தாவில் உள்ள எக்பால்பூர் மற்றும் கராயா பகுதிகளில் வசிப்பவர்கள்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பல குழுக்கள் முன்னதாக கொல்கத்தா நகரில் பேரணிகளை நடத்தின. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் (APDR) உட்பட பல உரிமைக் குழுக்களால் இன்று புதன்கிழமை ஒரு பெரிய பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.