நாம் நாள் முழுவதும் மொபைல், மடிக்கணினிகள் முதல் தொலைக்காட்சி வரை பல்வேறு திரைகளை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த பழக்கம் நாளடைவில் நம் கண்களை பாதிக்கலாம், இது கண்களில் அசௌகரியம், அரிப்பு, மற்றும் அடிக்கடி நீர் வடிதல் அல்லது வறண்டு, இறுதியில் சோர்வுக்கு வழிவகுக்கும்.டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதிக வெளிச்சம் ஆகியவற்றால் நம் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம்.எனவே, உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா சிறந்த வைத்தியங்களை பரிந்துரைத்தார்.
ஆயுர்வேதத்தின்படி, காலையில் வாயில் தண்ணீர் வைத்து கொப்பளித்துக் கொண்டு, கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்களைக் கழுவுவதற்கு மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது, சாதரண அறை வெப்பநிலையில் இருக்கும் நீரை பயன்படுத்துங்கள்.சோர்ந்த கண்களை ஆற்றுவதற்கு, காட்டன் துணி அல்லது பஞ்சை ஆட்டுப்பாலில் ஊறவைத்து அதை கண்களில் சிறிது நேரம் வைக்கலாம்.
வறண்ட கண்களுக்கு, இரண்டு கண்களிலும் ஒரு துளி விளக்கெண்ணெய் வைத்து, கால்களின் பாதங்களில் எண்ணெய் தடவவும்.வெள்ளரிக்காய் துண்டுகள் அவற்றின் குளிர்ச்சி விளைவுடன் கண்களை ஆற்றவும் உதவுகின்றன. மாற்றாக, கேடசின் (ஒரு ரசாயன கலவை) உள்ள டீ பேக்ஸையும் நீங்கள் பயன்படுத்தலாம். உள்ளங்கையில் கொஞ்சம் தேன் மற்றும் நெய் கலந்து தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவலாம். இது கண்களை ஈரப்பதமாக்கவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது.
திரிபலாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரைக் கொண்டு கண்களை கழுவலாம். இது பார்வையை மேம்படுத்தவும், சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.கேரட் மற்றும் கீரைகள் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் ஆரோக்கியமான கண்களை பராமரிக்க நன்மை பயக்கும்எந்தவொரு புதிய சிகிச்சை முறையிலும் ஈடுபடுவதற்கு முன்பு ஆயுர்வேத பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் அவசியம் என்று நிபுணர் கூறினார்.