பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்திருக்கிறது. இது உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும்.ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எத்தகைய தருணங்களில் ரத்து செய்யலாம் என்பதற்கான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, ஏதேனும் ஒரு பணியிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அப்பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அந்த இடத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றி தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று யு.ஜி.சி அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் பணியிடம் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், அது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக செயற்குழுவே எடுத்துக்கொள்ளலாம்; ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் அது குறித்து மத்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளில் கூறப்பட்டிருக்கிறது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக்கழக மானியக்குழு கருத்துகளைக் கேட்டிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து இறுதி விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிடவுள்ளது. அவ்வாறு இறுதி விதிகள் வெளியிடப்பட்டால், மத்திய உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் ஒழிக்கப்பட்டு விட்டதாக பொருள் கொள்ள முடியும்.