பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. சில மாடுகள் வீரர்களை சிதறவிட்டன. அவ்வகையில், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் காளையும் ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை மிரட்டி எடுத்தது. அவரின் பெயரில் அவிழ்த்துவிடப்பட்ட காளை பிடிபடாமல் சீறிப்பாய்ந்ததால் ''அடடா மயிலக்காளை, மச்சக்காளை.. தொட்டுப்பார்.. திருமாவளவன் மாடு.. மாடு வெற்றிபெற்றது'' என வர்ணனையாளர் அறிவித்தார்.
திருமாவளவன் பெயரில் காளை அவிழ்த்துவிடப்பட்டதை போலவே தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரது பெயரிலும் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி காட்சியளிக்கிறது. இப்போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது.