பஞ்சாப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆள்சேர்ப்பு தேர்வில், தனது காதலிக்கு பதிலாக ஆளமாறாட்டம் செய்து தேர்வு எழுத முயற்சி செய்த வாலிபர் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள பாபா ஃபரித் ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆட்சேர்ப்புத் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு எழுத வந்த அனைவருக்கும் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றபோது, ஒருவரின் விபரங்கள் பொருந்தாமல் இருந்துள்ளது, இதை கண்டறிந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது காதலியைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையின் கோட்காபுரா எஸ்ஹோ மனோஜ் குமார் என்பவர் கூற்றுப்படி, ஃபசில்காவைச் சேர்ந்த ஆங்ரேஸ் சிங், திருட்டு மற்றும் தொப்பியுடன் சல்வார் கமீஸ் அணிந்து தேர்வு அறைக்கு வந்தார். அவர் தனது முகத்தில் க்ளீன் ஷேவ் செய்து, பெண் போல் மேக்கப் போட்டு, தனது காதலி பரம்ஜீத் கவுரின் புகைப்படத்திற்கு மேல் தனது சொந்த புகைப்படத்தை (பெண் போல் உடையணிந்துள்ளார்) ஒட்டியிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
பெண் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்ற மையங்களில் ஒன்றான கோட்காபுராவில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் ஜனவரி 7ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆள்மாறாட்டம் செய்த நபர் தேர்வு அறையில் நுழைந்தபோதும், விண்ணப்பப் படிவத்தில் உள்ள பரம்ஜீத் கவுரின் படம், தேர்வுக்கு வந்தவர் முகத்துடன் பொருந்தாததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.பின்னர் பயோமெட்ரிக்ஸ் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது பெயர் மற்றும் விபரங்கள் பதிவுகளில் வைக்கப்பட்டுள்ள விபரங்களுடன் பொருந்தவில்லை. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவரது பெயா ஆங்ரேஸ் சிங் என்றும், தனது காதலிக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.