2 ஆண்டுகளில், 928 மாணவர்கள் பிராந்திய மொழிகள் மூலம் இன்ஜினியரிங் படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர்; 12 மொழிகளில் பொறியியல் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை; மத்திய அரசு.2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் பிராந்திய மொழிகள் மூலம் இளங்கலை பொறியியல் (B.E.) மற்றும் இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech) படிப்புகளில் சேர்க்கை பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை முறையே 245 மற்றும் 683 ஆகும். இந்த தகவலை கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் இன்று ராஜ்யசபாவில் பகிர்ந்து கொண்டார்.
மாநிலம் மற்றும் மொழி வாரியாக பிராந்திய மொழிகள் மூலம் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்க்கை பெறும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கேட்டு எம்.பி டாக்டர் அமீ யாஜ்னிக் கேள்வி எழுப்பினார்.அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு இணங்க, இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், பெங்காலி, அசாமி, மராத்தி, கன்னடம், ஒடியா, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற பதினொரு பிராந்திய மொழிகள் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில், பொறியியல் (B.Tech/ Diploma) புத்தகங்களை வழங்கும் நோக்கத்துடன், “தொழில்நுட்ப புத்தகம் எழுதுதல் மற்றும் மொழிபெயர்ப்பதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது” என்று அமைச்சர் பதிலளித்தார்.
மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் eKUMBH போர்ட்டலில் கிடைக்கின்றன.மேலும், கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மைத் தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படுகின்றன, இது பிராந்திய மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவுகிறது என்று அமைச்சர் கூறினார்.