வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (டிச.21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. திரும்பும் திசை எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு குளங்கள் நிரம்பி மதகு திறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. தமிழக அரசு அதிகாரிகள், மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியும், உணவு விநியோகமும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை.இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதால், இன்று (டிச.21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால், 3வது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதேநேரம் தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை