தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், "லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை" எனக் கூறி இருவரையும் 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியானது. அதில், "பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டுபேருக்கும் தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், பொன்முடி, மற்றும் அவரின் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்க்காக 30 நாள்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டது.
நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்ற அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் அடிப்படைத் தகுதியையே இழக்கிறார். அதனால், அவரது அமைச்சர் பதவியையும் தானாகவே இழந்ததாகிவிடும். இந்த நிலையில், இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துவரும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் இலாகா மாற்றம் குறித்து முதல்வர் தரப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.