ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் , தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார்.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களமாடி வருகிறது.
நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.
இந்நிலையில், வருகிற சனிக்கிழமை (நவம்பர் 04ம் தேதி) அன்று அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 36வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதன் பரம எதிரியான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் , தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார். மேலும் அவர் உலகக் கோப்பையில் இருந்து காலவரையின்றி வெளியேறியுள்ளார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மேக்ஸ்வெல் கடந்த திங்கள்கிழமை கோல்ஃப் வண்டியின் பின்புறத்திலிருந்து விழுந்துள்ளார். இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி மற்றும் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
இரண்டு முன்னணி வீரர்களில் அணியில் இல்லாத நிலையில் ஆஸ்திரேலியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ்-க்குப் பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கேமரூன் கிரீனும் சேர்க்கப்படலாம். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே தங்களுக்கு மிகவும் பழக்கமான 3 மற்றும் 4வது இடத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளது. நீண்ட காயத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ட்ராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் இடத்தில் பந்துவீசுவார் என்றும் தெரிகிறது.