நாளை மும்பையில் இந்தியா- இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் காற்றின் தரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மோசமடைந்து வரும் காற்றின் தரம் பற்றி பம்பாய் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நாளில், இந்திய கிரிக்கெட் வாரியம், இனி மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது எனக் கூறியுள்ளது. காற்று மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக வாரியம் கூறியது. நாளை (நவ.2) மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை இடையே போட்டி நடைபெறுகிறது. வரும் திங்கட்கிழமை டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்விக்கு பதிலளித்த பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, “இந்த விஷயம் குறித்து ஐ.சி.சியிடம் நான் முறைப்படி எடுத்துக் கூறினேன். இனி வரும் மும்பை மற்றும் டெல்லி போட்டியில் காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடிக்கப்படாது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட வாரியம் உறுதியாக உள்ளது. ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களை எப்போதும் முன்னணியில் வைக்கிறோம் என்றார். “மும்பை மற்றும் டெல்லியின் காற்றின் தரம் குறித்து பிசிசிஐ கவலை கொள்கிறது. கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில் ஐ.சி.சி உலகக் கோப்பையை நாங்கள் நடத்தி வந்தாலும், அனைவரது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று ஷா கூறினார்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, மும்பையில் செவ்வாயன்று ஒட்டுமொத்த AQI (Air Quality Index) அளவீடு 172 என்ற மிதமான நிலையில் இருந்தது. பாந்த்ரா குர்லா வளாகப் பகுதியில் 260 என்ற அபாயகரமான உச்சத்தை எட்டியது. டெல்லியில், இந்த அக்டோபரில் காற்றின் தரம் 2020க்குப் பிறகு மிக மோசமாக இருந்தது.