உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், அகமதாபாத் ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2-வது அரையிறுதிப் போட்டியில் புள்ளிகள் ட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் வெற்றியை ருசிக்கும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். இப்போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.சி.சி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை உற்சாகப்படுத்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் நகரத்திற்கான பயண டிக்கெட்டுகளில் அபரிதமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 என வசூலிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு இரவுக்கு ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக மனிகண்ட்ரோல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அகமதாபாத்தில் தங்கும் விடுதிகளின் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. அக்டோபருக்குள், ஹோட்டல்களுக்கான டிக்கெட் விலைகள் ஒரு இரவுக்கு ரூ. 24,000ல் இருந்து ரூ. 2,15,000 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அகமதாபாத் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் விலையும் 100 மடங்கு அதிகரித்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஓட்டல்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. புக்கிங்.காம், மேக் மை ட்ரிப் மற்றும் அகோடா போன்ற ஹோட்டல் முன்பதிவு தளங்களிலும் ஹோட்டல் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. தற்போதும் அது தொடர்ந்து வருகிறது.