தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
தமிழ் திரையுலகம் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா" எனும் விழாவினை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பின்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.