சனாதனம் தொடர்பாக அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் பேசியதை விட நான் பெரிதாக பேசவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும் நீட் தேர்வு எதிர்ப்பு பற்றியும் பேசினார்.
துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.அதற்குப் பதிலளித்த உதயநிதி, “நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் சொன்ன வார்த்தையில் இருந்து எதையும் மாற்றிக்கொள்ள மாட்டேன். நான் எனது கொள்கையைதான் பேசியுள்ளேன்.
அம்பேத்கர் பேசியதை விட நான் பெரிதாக பேசவில்லை; தந்தை பெரியார் பேசியதை விட நான் பெரிதாக பேசவில்லை. எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன் பேசியதை விட நான் பெரிதாக, தப்பாக எதுவும் பேசவில்லை. நான் பேசியது சரிதான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்” என்றார்.தொடர்ந்து, அமைச்சர் பதவி இன்னைக்குவரும் நாளைக்கு போகும். இளைஞரணி பதவியும் அப்படிதான். மனிதனாக இருப்பது முக்கியம். அதைப் பற்றி எனக்கு கவலைக் கிடையாது” என்றார்.
இதையடுத்து நீட் தேர்வு குறித்து பேசிய உதயநிதி, “இது ஆறு ஆண்டுகால பிரச்னை; அது பல்லாயிரக்கணக்கான ஆண்டு பிரச்னை” என்றார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்.எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.