ராஜ்யசபா எம்.பி தீரஜ் சாஹு, இந்த பணத்திற்கும் காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் அவருக்கு சொந்தமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 'பவுத் டிஸ்டிலெரி' எனப்படும் மதுபான ஆலை மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் (ஐ.டி) கடந்த வாரம் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். மேலும், பல்டியோ சாஹு மற்றும் குரூப் ஆஃப் கம்பனிஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் தொடர்புடைய சுமார் 30 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 10 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை, 350 கோடி ரூபாய் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த அதிரடியான சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "ஏஜென்சியால் ஒரே ஆபரேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச பணம் இதுவாகும். கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி 5 நாட்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை தான் முடிவடைந்தது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் பலங்கிர், சம்பல்பூர் மற்றும் திட்லாகர் ஆகிய மூன்று எஸ்.பி.ஐ வாங்கி கிளைகளுக்கு எண்ணுவதற்காக பைகளில் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகபட்சமாக 176 பைகள் நிரப்பப்பட்ட ரொக்கப் பணம் எஸ்.பி.ஐ-யின் பலங்கிர் கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நோட்டுகளை எண்ணுவதற்கு கூடுதல் ஆட்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது." என்று தெரிவித்தார்.