கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்பதற்காக தமிழக பெண் மிரட்டப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய தொழிற் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் குடும்பத்தினருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்று விட்டு.
திரும்பும்போது கோவா விமான நிலையத்தில் சோதனையின் போது, மத்திய தொழிற் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர் இந்தியில் பேசியுள்ளார். அப்போது சர்மிளா தனக்கு இந்தி மொழி தெரியாது என்று கூறியதற்கு அந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு, “தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கு, அப்ப இந்தி தெரியுனும்ல, இந்தி தேசிய மொழி, நீங்க கண்டிப்பா இந்தி கத்துக்கணும்” என்று மிரட்டும் விதமாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இச்சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.தனது X பக்கத்தில், "இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்" என்று கூறி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கோவா விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள சி.ஐ.எஸ்.எஃப், "மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) நாட்டின் 67 சிவில் விமான நிலையங்களை பாதுகாக்கிறது. சி.ஐ.எஸ்.எஃப் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்களைக் கொண்ட CAPF ஆகும். தேசத்தின் மொழியியல் பன்முகத் தன்மையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாள்தோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பயணிகளுடன் உரையாடும்போதும் அதையே செய்கிறோம். எவ்வாறாயினும், கோவை விமான நிலையத்தில் நடந்த ம்பவம் குறித்து விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளது.