கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொது ஊழியரான அமைச்சர் பொன்முடிக்கு, கணக்கில் காட்டப்படாத வகையில் வந்த வருமானம் மூலம் அவரது மனைவி விசாலாட்சி பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்பதால் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக பொன்முடியும், அவரது மனைவியும் டிசம்பர் 21-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவே ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதிஇழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல,இந்த வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தனதுஎம்எல்ஏ, அமைச்சர் பதவியை பொன்முடி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.