எதற்கும் கவலைப்படாத சென்னை அணி உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது. 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை துபாயில் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி முன்னணி வீரர்களை குறி வைத்து ஆக்ரோஷமாக செயல்பட்டது.
ஒரு கட்டத்தில், அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிரடியான சதம் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட் மீது ஆர்வம் காட்டியது.டிராவிஸ் ஹெட் பெயர் அறிவிக்கப்பட்ட உடனே சென்னை அணி ஏலத்தை ஆரம்பிக்க கையை உயர்த்தியது. ஆனால், யார் ஆரம்பிக்க போகிறார்கள் என காத்திருந்த ஐதராபாத் உரிமையாளர் காவியா மாறன் வழக்கம் போல் உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்து விட்டார்.
இரு அணிகளும் மாறி மாறி கை உயர்த்தி ஏல தொகையை உயர்த்தவே டிராவிஸ் ஹெட்டின் விலை மளமளவென அதிகரித்தது. இறுதியில் 6 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது. ஏற்கனவே ஐதராபாத் அணி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை ரூ. 20.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய நிலையில், ராவிஸ் ஹெட்டை வாங்கி அதிரடி காட்டியது.
இதற்கெல்லாம் கவலைப்படாத சென்னை அணி உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது.தொடர்ந்து, இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. இதன்பிறகு, நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு சென்னை அணி அதிரடியாக வாங்கி அசத்தியது.