"அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றி படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பதிவில், "இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான திரு. ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்."அருமை நண்பர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து. இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்" என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.