சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
அமைச்சர் பொன்முடி தி.மு.க ஆட்சிக் காலத்தில், கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு ரூ. 28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அதன் மூலமாக வெளிநாட்டில் பங்குகளை வாங்கி பினாமி பெயரில் சொத்துகளை குவித்திருப்பதாகவும் அமலாக்கத்துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கணக்கில் காட்டப்படாத பணம் ரூ. 81 லட்சம் ரொக்கம் மட்டும் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தைக் கைப்பற்றியும் அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 41 கோடியை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து அமலக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் 2 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பொன்முடி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (நவம்பர் 30) காலை அவருடைய வழக்கறிஞர்கள் உடன் சென்று விசாரணைக்கு ஆஜரானார்.
அமைச்சர் பொன்முடியிடம் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியிடம் கேட்டுள்ளனர். இந்த பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியிடம் மேற்கொண்டு வரும் விசாரணை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.