10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.நடப்பு சீசனில் இதுவரை நடந்த 9 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் புள்ளிகள் பட்டியலில் 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், 8 போட்டிகளில் 4ல் வெற்றி, 3ல் தோல்வி, ஒரு ஆட்டம் டை என 25 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் தபாங் டெல்லி கே.சி. அணி உள்ளது.
டிசம்பர் 31 அன்று பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 51-42 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் டிசம்பர் 30 அன்று நடந்த போட்டியில் தபாங் டெல்லி கே.சி. அணி உ.பி யோதாஸ் அணியை 35-25 வீழ்த்தியது. அதிரடியான வெற்றிக்குப் பிறகு இந்த இரு அணிகள் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
பி.கே.எல் வரலாற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி. ஆகிய இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இரு அணிகளும் சம அளவில் சவால் விட்டு, 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்தது.குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி. அணிகள் மோதிய முந்தைய சீசன் போட்டி தபாங் டெல்லிக்கு சாதகமாக முடிந்தது. அந்த அணி 50-47 என்கிற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.