சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை; தீர்ப்புக்கு எதிராக பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல்.சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.தி.மு.க மூத்த நிர்வாகியான பொன்முடி மீது 2 சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து 2017-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கான 3 ஆண்டு சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது. 30 நாட்களுக்குப் பிறகு ஜனவரி 22 ஆம் தேதி பொன்முடியும் மனைவி விசாலாட்சியும் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பில் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும், தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி தரப்பின் மனுவில் கூறப்பட்டுள்ளது.