இன்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில் ” மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கில் சுமார் 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன்பிறகு வட தமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும் - மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு வரை மழையும், பலத்த காற்றும் தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.