தமிழகம் முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை செவ்வாய்கிழமை (டிசம்பர் 5) 'மிக்ஜம்' புயல் தீவிர புயலாக மாறி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும். மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை யில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று தொடரக்கூடும் என வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்த தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் விமானப் போக்குவரத்து இன்று (திங்கள்கிழமை) இரவு வரை ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், தென்னக ரயில்வே குறைந்தது 144 ரயில்களை ரத்து செய்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை பேரிடர் மீட்புக்குழுவினர் (என்.டி.ஆர்.எஃப்) மீட்டு வருகிறார்கள். சென்னையில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மற்றும் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. சென்னையில் குரோம்பேட்டை, பெரம்பூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் மக்கள் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் இன்று திங்கள்கிழமை அதிகாலை மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செவ்வாய்கிழமை (டிசம்பர் 5) புயல் தீவிர புயலாக மாறி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்திலும் மற்றும் மணிக்கு 110 கி.மீ வேகத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.