ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இந்திய விமானப் படையின் பிரமாண்டமான விமான சாகச கண்காட்சி இடம் பெற உள்ளது.
இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. 1:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
அகமதாபாத்தில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதேபோல், இந்திய விமானப் படையின் பிரமாண்டமான விமான சாகச கண்காட்சி இடம் பெற உள்ளது.
இந்தியாவுக்கு இரண்டு உலகக் கோப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் எம்.எஸ் தோனி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளார்கள். அத்துடன் இன்னும் பல அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதனால், அகமதாபாத்தில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் தடபுடலாக தயாராகி வருகிறது.
பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரல்களின் படி, இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு டாஸ்க்குப் பிறகு சூர்யகிரண் இந்திய விமானப் படையின் விமானக் காட்சி நடைபெறும். இது 15-20 நிமிட நிகழ்ச்சியாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக டெமோவுடன் செய்யப்பட்டன. முதல் இன்னிங்ஸ் ட்ரிங்ஸ் இடைவேளையின் போது, கோக் ஸ்டுடியோவின் குஜராத்தி பாடகர் அதித்யா கதாவி பிரபல 'கோட்டிலோ' பாடலை பாடுகிறார். 1975 முதல் 2019 வரை உலகக் கோப்பை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் பி.சி.சி.ஐ சிறப்பு பிளேஸரை வழங்க உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாயிட் (1975 மற்றும் 1979 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), இந்தியாவின் கபில் தேவ் (1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (1987 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (1999 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), ரிக்கி பாண்டிங் (2003 மற்றும் 2007 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), இந்தியாவின் எம்.எஸ் தோனி (2011 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் (2015 உலகக் கோப்பை வென்ற கேப்டன்), இங்கிலாந்தின் இயோன் மோர்கன் (2019 உலகக் கோப்பை வென்ற கேப்டன்) அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். மோர்கன் மற்றும் பாண்டிங் போன்றோரில் சிலர் ஏற்கனவே வர்ணனையாளர் குழுவில் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ளனர்.
எவ்வாறாயினும், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா மற்றும் 1992 உலகக் கோப்பை பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கான் அழைக்கப்பட்டார்களாக இல்லையா என்பதில் தெளிவு இல்லை.