13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை வென்றது. தொடர் முழுவதும் வெற்றியைப் பதிவு செய்து வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது ரசிகர்கள் இடையே கவலையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2003க்குப் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஆண்டுகால ஏக்கத்தை தீர்க்கும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று இந்தியா அணி போராடி தோல்வி அடைந்தது. இறுதிப் போட்டியில் வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்த்திருந்த பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர், நடிகர் செல்வராகவன் இந்திய அணி தோல்வியுற்றது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" என்று கூறியுள்ளார்.