இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்து சமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது என்றும், தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைவரையும் ஒருங்கிணைத்து கோவில் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகிறோம். அண்மையில் நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் சுமார் 8 லட்சம் பேர் ஒரே நாளில் கூடினார்கள். திருக்கல்யாணம் உட்பட நிகழ்ச்சி நடைபெற்ற மொத்தம் 8 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அங்கு நடைபெற்று வரும் பணிகள் காரணமாக ஏற்படும் இடையூறுகளை எல்லாம் கடந்து 26 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைத்து, தினமும் 35 ஆயிரம் பேர் சஷ்டியில் விரதம் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தனை லட்சம் மக்கள் கூடிய நிகழ்வில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை. ஒரே ஒரு ஜெயின் பறிப்பு நடைபெற்றதாக கூட புகார் இல்லை. போக்குவரத்தும் சீராக செயல்பட்டது.
தி.மு.க ஆட்சியில் 15 கோயில்களில் 1462 கோடி ரூபாய் செலவில் வரைவு திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான 518 கோயில்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறோம். இந்த கோயில்களில் பணிகள் மேற்கொள்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-23 ஆண்டு 100 கோடி ரூபாய், 2023-24 ஆம் ஆண்டு 100 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. பரம்பரை அறங்காவலர்கள் கோயில் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதால் தான் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. 48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.