ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் 11ஆம் தேதி (இன்று) வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி தனி தீர்ப்பு ஒன்றையும், நீதிபதிகள் கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் ஒரு தீர்ப்பும், நீதிபதி கவுல் தனி தீர்ப்பு ஒன்றையும் வழங்கியுள்ளனர். வழக்கில் மூன்று விதமான தீர்ப்பு வழங்கப்பட்டாலும், ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக நடவடிக்கைதான் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தனி தீர்ப்பின் தீர்ப்பாக கூறியுள்ளார். ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ஆட்சி இருக்கும்போது, மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற வாதங்கள் நிராகரிக்கப்படுவதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.