கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகள் நிறுத்த வசதியாக 1 முதல் 14 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 முதல் 7 நடைமேடை வரை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் 8 முதல் 11 வரையுள்ள நடைமேடைகள் விழுப்புரம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.12 முதல் 14 வரை ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழக பேருந்து சார்பில் 8, 9 நடைமேடைகள், விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, கடலூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் 10, 11 நடைமேடைகளில் இருந்து, செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், திடீரென 10, 11 நடைமேடைகள் ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடும் இடப்பற்றாக்குறை ஏற்படும்: 10, 11 நடைமேடைகளில் இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது 8, 9 நடைமேடைகளில் இருந்து இயக்கப் படுகின்றன. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 8, 9 நடைமேடைகளில், விழுப்புரம் மார்க்கத்தில் ஏற்கெனவே, 330 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்துடன், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும், 259 பேருந்துகளையும் சேர்த்தால், அங்கு கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்படும்.