சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிட்ட நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில், தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை சராசரியாக 65,000 பயணிகள் தென் மாவட்டங்களில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில், இந்த எண்ணிக்கை 1 லட்சம் வரை இருக்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த பேருந்து நிலையம் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று 100 பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி சோதனை ஓட்டம் நடைபெற்றது. பேருந்துகள் மீண்டும் வெளியே வந்து ஊரப்பாக்கம் வழியாக சென்று மீண்டும் கிளாம்பாக்கம் வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் அறியப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார் செய்யப்படும். இதையடுத்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.