சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதியதாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிப்பட்டுள்ள இந்த பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார். தற்போது, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பிப்ரவரி 1 முதல் மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையம் தொடக்கப்பட உள்ளது என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் பிப்ரவரி 1 முதல் மாதாந்திர பயணச் சீட்டு விநியோகிக்க விற்பனை மையம் தொடக்கப்பட உள்ளது. விருப்பம்போல் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.1000 பயண அட்டை, மாதாந்திர பயண சலுகை அட்டையையும் பெறலாம். மாணவர்களுக்கு 50 சதவீத சலுகைக்கான பயண அட்டையும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கனும் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.