வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனது ஸ்பெயின் மாநாடு அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
எனது ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு (#GIM2024) ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன்.நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.