காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உள் விவகாரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல், கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய குழுவாகச் செயல்பட வேண்டும்; மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்.மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சி வெற்றியை உறுதிசெய்ய அடுத்த மூன்று மாதங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இரவு பகலாக உழைத்தால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாற்று அரசை வழங்க முடியும் என நாடு முழுவதும் இருந்து கலந்துக் கொண்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உள் விவகாரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல், கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய குழுவாகச் செயல்பட வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக் கொண்டார்.
“கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க பா.ஜ.க உணர்ச்சிகரமான பிரச்சினைகளை முன்வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் வேண்டுமென்றே காங்கிரஸை இழுக்கிறார்கள்,” என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.நரேந்திர மோடி அரசாங்கம், "நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் காங்கிரஸின் பங்களிப்பைப் புறக்கணிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது" என்று மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். எனவே "நாம் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்," என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.