2023-ல் கூகுள் தளத்தில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள் குறித்து இங்கு பார்ப்போம். உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை பல்வேறு தகவல்கள் பெற கூகுள் தளம் மிக முக்கிய தளமாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் வரலாற்று சாதனையான சந்திரயான்- 3 முதல் இடத்தில் உள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு அருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரயான்- 3விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது. அடுத்து, ‘What is’ என்று கேள்வி கொண்டு தேடப்பட்டதில் சாட் ஜி.பி.டி, இந்தியாவின் ஜி20 தலைமை, UCC ஆகியவைகள் இந்த பட்டியலில் முதன்மை பெற்றுள்ளன.
தொடர்ந்து, ‘How To’ கேள்வி பட்டியலில், சூரியனில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி?, 'YouTube-ல் தனது முதல் 5K பாலோவர்களை கொண்டு வருவது எப்படி?, வாட்ஸ்அப் சேனல் உருவாக்குவது எப்படி?, ‘கார் மைலேஜை மேம்படுத்துவது எப்படி’ என்ற கேள்விகள் இதில் இடம்பெறுகின்றன.இதில் சுவாரஸ்யமாக, ‘தூய்மையான காஞ்சிவரம் பட்டுப் புடவை அடையாளம் காண்பது எப்படி’ என்ற கேள்வியும் ‘How To’ பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளது. விளையாட்டு பிரிவில் எப்போதும் போல் கிரிக்கெட் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிகள் பற்றிய தேடல் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
சுப்மான் கில் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் உள்நாட்டிலும் உலக அளவிலும் சிறந்த டிரெண்டிங் கிரிக்கெட் வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.அதோடு, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, முதல்முறையாக நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் ஆகியவையும் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன. 'கபடியை எப்படி சிறப்பாக விளையாடுவது?, 'செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி' போன்ற கேள்விகளும் கூகுளில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்டவைகளாக உள்ளன.