தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள திருவெறும்பூர் பெல் நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியில் கட்டடம் கட்ட மாணவர்களிடம் ரூ.5 ஆயிரம் டெபாசிட் கேட்ட பள்ளி நிர்வாகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள திருவெறும்பூர் பெல் நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியில் கட்டடம் கட்ட மாணவர்களிடம் ரூ.5 ஆயிரம் டெபாசிட் கேட்ட பள்ளி நிர்வாகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு;
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் டவுன்ஷிப் வளாகத்தில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படி ஆர்.எஸ்.கே என்னும் பெயரில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு கட்டடம் குடிநீர் மின் வசதி ஆகியவை பெல் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
ஆரம்ப கால கட்டத்தில் பள்ளியை முதலில் மான்போர்ட் பிரதர்ஸ் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தனர். இதில் பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவியர் படித்து வந்தனர். பெல் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு கல்வி கட்டணமும் இதர பிரிவினருக்கு வேறு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்பள்ளியில் மாணவ மாணவியர்களை சேர்ப்பதற்கு பல்வேறு சிபாரிசுகளை பிடிக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் பெல் நிர்வாகத்திற்கும் மான்போர்ட் பிரதர்ஸ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கடந்த 2006-ம் ஆண்டு ஆர்.எஸ்.கே. பள்ளியை இயக்கி வந்த மான்போர்ட் பிரதர்ஸ் புதிதாக காட்டூர் அருகே பள்ளியை தொடங்கி விட்டனர்.
இதனையடுத்து பல்வேறு அனுபவம் வாய்ந்த சில பள்ளி நிர்வாகங்கள் ஆர்.எஸ்.கே. பள்ளியை எடுத்து நடத்திய நிலையில், தற்பொழுது சென்னையைச் சேர்ந்த டி.ஏ.வி நிர்வாகம் பள்ளியை நடத்தி வருகிறது. இந்தநிர்வாகம் வந்தது முதல் தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்களிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரையும் நமஸ்தே என்று சொல்ல வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறியதால் ஆர்.எஸ்.கே.பள்ளி நிர்வாகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அடுத்து பள்ளி கட்டண உயர்வால் பெற்றோர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வந்தனர். தற்பொழுது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் இல்லாததால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் வகுப்புகள் என்று ஒரு பிரிவுக்கும், பிற்பகல் வகுப்பு என்று மற்றொரு பிரிவுக்கும் நடத்தப்பட்டு வருகின்றது. இப்படி வகுப்புகள் பிரிக்கப்பட்டதால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கிடையே மாணவர்களை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் ஐந்தாயிரம் டெபாசிட்டாக வழங்குங்கள், பின்னால் பள்ளியை விட்டு மாற்று சான்றிதழ் பெறும்பொழுது திருப்பி தரப்படும் என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தங்களது எதிர்ப்பை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவித்து வருகின்றனர். சுமார் 8000 மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான கட்டட வசதியை பெல் நிர்வாகம் கட்டிக் கொடுக்காமல் பெற்றோர்களிடம் வசூல் செய்ய பெல் நிறுவன நிர்வாகம் மறைமுகமாக சூழ்ச்சி செய்து வருகிறது என்று பெற்றோர்கள் பெல் நிர்வாகத்தை சாடுகின்றனர்.
இந்த செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் செ.ராஜ்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; பள்ளி கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில், பெல் தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகத்தினுள் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பள்ளி ஆர்.எஸ்.கே.பள்ளி. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் இயங்கி வரும் இப்பள்ளி, பெல் நிறுவனத்தால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்விக் குழுமங்களின் நிர்வகிப்பில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டி.எ.வி. கல்வி குழுமத்தின் சார்பில் இப்பள்ளி இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
மேலும், மாணவர்கள் பயிலும் எண்ணிக்கைக்கான அளவில் கட்டடம் இல்லாததால், ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு அரைநேர வகுப்புகள் மட்டுமே இரண்டு பகுதிகளாக நடந்து வருகிறது. பெற்றோர்கள் இதனாலேயே மிகப்பெரிய சுமையை சந்தித்து வருகிறார்கள். தனியார் வாகனங்களில் கட்டணம் செலுத்தி குழந்தைகளை குறித்த நேரத்தில் சேர்த்தும் அழைத்தும் வரக்கூடிய நிலை இருந்து வருகிறது.
தற்போது பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், திரும்பப் பெறக்கூடிய வைப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது. இத்தொகை பள்ளியிலிருந்து விடுபட்டு மாற்றுச்சான்று பெறும்போது திரும்பக் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொகை எதற்காக வசூல் செய்யப்படுகிறது என்று பெற்றோர்கள் நிர்வாகத்திடம் விசாரிக்கையில், பள்ளிக்கான கட்டடம் கட்டுவதற்காக என நிர்வாகத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே புத்தகம் மற்றும் இதர தொகை என்று ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் பல ஆயிரங்கள் வசூல் செய்யப்பட்டு வரும் சூழலில், கல்விக் கட்டணத்தையே கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பெற்றோர்கள் செலுத்தி வரும் சூழலில், இப்படியான அறிவிப்பு என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பள்ளி நிர்வாகம் உடனடியாக இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு பெற்றோர்களுக்கு சுமையை, நெருக்கடியை, மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.