மார்கழி மாதத்தில் பாவை நோன்பு மேற்கொள்ளும் முறை மற்றும் பாவை நோன்பின்போது யாரை வணங்க வேண்டும் என்பது குறித்து பாடகி அனிதா குப்புசாமி தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.மார்கழி மாதம் என்றாலே, ஆண்டாளின் பாடல் வரிகள் பலருக்கும் நினைவுக்கு வரும். இந்த மார்கழி மாதத்தில் ஆண்டாள் கடைபிடித்த பாவை நோன்பு பற்றியும் மார்கழியில் செய்ய வேண்டியது குறித்தும், அனிதா குப்புசாமி கூறியிருப்பதாவது: “மார்கழி மாதம் என்றாலே, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, பாவை நோன்பு, வண்ண வண்ண கோலங்கள், அதில் பிள்ளையார் பிடித்து வைப்பது எல்லாம் நினைவுக்கு வரும்.
சிவ, வைஷ்ணவ தலங்களில் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். பொதுவாக மார்கழி மாதம் என்றால் பீடை நாள் என்று சொல்கிறார்கள். ஆனால், விஷ்ணு மாதங்களில் நான் மார்கழி என்று கூறுகிறார். கடவுளுக்கான மாதம் எப்படி பீடை நாளாக இருக்கும், இது பீடை நாள் நாள் அல்ல, பீடு நாள். பீடு என்றால் வெற்றி என்று அர்த்தம். இந்த மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாவை நோன்பு பிரபலமானது. அதிகாலையில் நீராட அழைக்கிறார் ஆண்டாள் நாச்சியார். அவர் எப்படி பாவை நோன்பு மேற்கொண்டார் என்றால், அந்த காலத்தில், ஆற்றங்கரை, குளத்தங்கரைக்கு சென்று, மணலில் அம்பாள் துர்கை அம்மனை பிடித்து வைத்து வழிபடுவார்கள்.
பெண்கள் திருமணம் ஆக வேண்டும், நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்றும் வணங்குவார்கள். அதுமட்டுமில்லாமல், உடல், மனம் ஆரோக்கியம் வேண்டி வழிபடுவார்கள். இந்த மார்கழி மாதத்தில் பிள்ளையாரை வழிபடலாம், ஏனென்றால், கிராமங்களில் இந்த மார்கழி மாதங்களில் அதிகாலையில் வாசலில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூச்சுடுவார்கள். அதை கன்னிப் பொங்கல் அன்று ஆற்றில், குளத்தில் கரைத்துவிடுவார்கள். அதனால், மார்கழி மாதத்தில் அம்பாள் துர்கை அம்மன், பிள்ளையார் ஆகிய தெய்வங்களை வழிபடலாம் என்று மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருக்கும் முறையை நாட்டுபுறப் பாடகி அனிதா குப்புசாமி வீடியோவில் கூறியுள்ளார்.