மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு; உயிரிழப்பு, பயிர், கால்நடை, படகு சேதம் வரை நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடியவில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.இதற்கிடையில் மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், மிக்ஜாம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும். இந்த நிவாரண தொகை பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும்.புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடாக வழங்கப்படும் தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த குடிசைகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ.5,000 தற்போது ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ.13,500 தற்போது ரூ.17,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேருக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ.18,000 தற்போது ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு நிவாரணமாக ஏற்கனவே வழங்கப்படும் ரூ.30,000 தற்போது ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.வெள்ளாடு, செம்மறியாடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும். இது முன்னர் ரூ.3000 ஆக இருந்தது.
முழுமையாக சேதமடைந்த மீன்பிடி வலைகள் உட்பட கட்டுமரங்களுக்கு நிவாரணம் ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டுமரங்களுக்கு நிவாரண நிதி ரூ.10,000-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வல்லம் வகை படகுகளுக்கு ரூ.1 லட்சம், வலைகளுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்கப்படும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.