பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலைசென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய - மாநில அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். அப்போது, பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். அவ்வகையில், தமிழ் திரையுலகின் 'ஆக்சன் கிங்' நடிகர் அர்ஜுன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மோடி - அர்ஜுன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பாக நடிகர் அர்ஜுன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நடிகர் அர்ஜூன் பேசுகையில், "என்னுடைய கோவிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். சும்மா கேஷுவலாகத்தான் சந்தித்து பேசினேன்.
இப்போது தான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். ரொம்ப பிடித்தமானவர். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார். இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம்." என்று கூறினார். பா.ஜ.க-வில் இணைந்து விட்டதாக பரவிய செய்தி குறித்த கேள்விக்கு, "அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது" என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.