தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். தமிழ்நாட்டின் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். டிசம்பர் முதல் வாரத்தில் இங்கு மழை பெய்தது. தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000 அறிவித்து வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கடந்த 17,18 தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் கடுமையான பாதிப்புளை சந்தித்து உள்ளனர். இந்தப் பகுதிளில் இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கும் அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், நேற்று (டிச.24) தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமரிடம் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை விளக்கினேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தேன். மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவிகளைச் செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார்” என்று பதிவிட்டுள்ளார்.