தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் நேற்று அவர் கலந்து கொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
டந்த சில தினங்களாகவே முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, மு.க ஸ்டாலின் அண்ணா அறிவாலாயம் முதல்வர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கும் அவர் வரவில்லை. இந்த நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
முதலமைச்சரின் உடல்நிலையே இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவை உறுதியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இருமலும் சற்று உடல்நல பாதிப்பும் இருந்த நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டுமென்றும் அவர்கள் கூறியுள்ளனர். மெட்ராஸ் ENT ஆராய்ச்சி தலைமை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.