இந்திய நாட்டிலேயே அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். இவர், நாளொன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி நன்கொடை வழங்குகிறார்.
இந்தியாவில் அதிக நன்கொடை அளிப்பவர் என்ற பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் தொடர்ந்து, 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.இவர், 2022-23ஆம் ஆண்டில் ரூ.2,042 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதாவது நாளொன்று சராசரியாக ரூ.5.6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
ஷிவ் நாடாரின் நன்கொடைகள், 2022 உடன் ஒப்பிடும்போது 76 சதவீதம் அதிகரிப்பை காட்டுகின்றன.தொடர்ந்து, விப்ரோவின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி, ₹1,774 கோடி நன்கொடைகள் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இது அவரது முந்தைய பங்களிப்புகளுடன் ஒப்பிடுகையில் 267 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் முறையே ரூ.376 கோடி மற்றும் ரூ.287 கோடி நன்கொடைகளுடன் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.இந்தத் தரவரிசையில், அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 2022 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பஜாஜ் குடும்பம் 11 இடங்கள் முன்னேறி பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. இந்த நிலையில், வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த அனில் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர் சுகாதாரத் துறையில் கவனம் செலுத்தி, தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.241 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
நந்தன் நிலேகனியைத் தவிர, கிரிஸ் கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ் மற்றும் எஸ்.டி.ஷிபுலால் உட்பட இன்ஃபோசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் மூன்று நபர்கள் நன்கொடை பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முறையே ரூ.93 கோடி, ரூ.47 கோடி மற்றும் ரூ.35 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.