நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 82 ரன்கள் எடுத்தார்.
3-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறி இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் (92 ரன்), விராட் கோலி (88 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (82 ரன்) ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 357 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 358 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கையை பந்துவீச்சு மூலம் மிரட்டியது இந்தியா. அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெளுத்து வாங்கிய ஷ்ரேயாஸ்
ஷார்ட் பந்துக்கு எதிராக இந்திய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் சிரமப்படுகிறார் என்கிற பேச்சு இருந்து வரும் நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதற்கென சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வந்தார். நேற்றைய போட்டியில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா இருந்த போது களம் புகுந்த ஷ்ரேயாஸ் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.